முல்லைத்தீவில் நாளை எட்டு பாடசாலைகளில் கல்விச் செயற்பாடு நிறுத்தம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலை காரணமாக நாளைய தினம் (19.12.2023) எட்டு பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறாது என முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக 1586 குடும்பங்களை சேர்ந்த 4806 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில் ஏழு இடைத்தங்கல் முகாம்களில் 341 குடும்பங்களைச் சேர்ந்த 1039 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தங்கல் முகாம்களாக பாடசாலைகள்
இவ்வாறான பின்னணியில் இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகளில் நாளை(19) கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு பாடசாலைகள்
இதற்கமைவாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மு/மன்னாகண்டல் அ.த.க.பாடசாலை, மு/இருட்டுமடு தமிழ் வித்யாலயம்,மு/நெத்தலியாறு ஆரம்பப் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மு/கருவேலன்கண்டல் அ.த.க.பாடசாலை,மு/கூழாமுறிப்பு அ.த.க.பாடசாலை,மு/முத்துஐயன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம் மு/பேராறு தமிழ் வித்தியாலயம் மு/பண்டாரவன்னியன் மகாவித்தியாலயம் (கற்சிலைமடு ) ஆகிய ஐந்து பாடசாலைகளும் நாளை(19) கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறாது என முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது
வீதியை குறுக்கறுத்து பாயும் வெள்ளம்
அத்துடன் முல்லைத்தீவு பரந்தன் வீதியில் விசுவமடு மாணிக்க பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள வீதியை குறுக்கறுத்து வெள்ள நீர் பாய்ந்து கொண்டிருக்கின்றது.
எனவே இதனால் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் அவதானமாக பயணிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |