ஈழத்தவரின் வரலாற்றுப் பதிவு - அனைத்துலக திரைப்பட விழாவில் ஈழத்து திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!
ஈழத்து கலைஞர்களினால் உருவாக்கப்பட்ட தூவானம் முழுநீள திரைப்படம் அனைத்துலக திரைப்பட விழாவிற்கு தெரிவாகியுள்ளது.
தற்பொழுது யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் அனைத்துலக திரைப்பட விழாவிலே திரையிடுவதற்கு தெரிவாகி இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கிலே திரையிடப்பட்டது.
ஈழத்த கலைஞர்களின் முயற்சி
இத்திரைப்படம் 18.02.2023 அன்று ஈழத்தின் பல திரை அரங்குகளிலே திரைக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150இற்கும் அதிகமான ஈழத்து கலைஞர்களின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டது.
இத்திரைப்படத்தின், கதை, திரைக்கதை வசனம், பாடல்கள் மற்றும் தயாரிப்பு என்பவற்றை வைத்திய நிபுணர் ச.சிவன்சுதனும், நெறியாள்கையை கலாநிதி ரதிதரனின் ஆகியோரும் மேற்கொண்டுள்ளனர்.
முதலாவது திரைப்படம்
ஈழத்தவர்களின் வரலாற்றுப் பதிவுகளை மையப்படுத்தி வெளிவரும் இத்திரைப்படம் இசைவாணர் கண்ணன் குழுவினர் இசைப்பணி ஆற்ற, பாலசுந்தரம் என்பவரின் தயாரிப்பு முகாமைத்துவத்துடனும் பிரபுவின் படத்தொகுப்புடனும் நித்திலம் கலையகத்தின் முதலாவது திரைப்படமாக வெளிவர இருக்கிறது.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பாலமுகுந்தனும், உதவி நெறியாளராக புரந்தகனும் பணியாற்றியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

