பிரான்சில் ஈழத்தமிழரான சுஜீவனின் கருவிக்கு கிடைத்த விருது!
பரிஸின் (Paris) புறநகரப்குதியான செய்ன் மற்றும் உவாஸ் பிராந்தியத்தில் உள்ள தொழில்முனைவோரின் புதுமையான திட்டங்களில் பார்வையாளர் விருது பிரிவில் ஈழத்தமிழரான சுஜீவன் முருகானந்தம் உருவாக்கிய கருவி அதிக வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளது.
81 சிறிய நிறுவனங்கள் பங்கேற்ற இந்த போட்டியில் 14 இறுதிப் போட்டியாளர்கள் தேர்வுக்குழு நிலைகளைக் கடந்து தெரிவு செய்யப்பட்டதன் முடிவில் 5 புதுமையான திட்டங்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டது. இதில் ஒன்றாக சுஜீவன் முருகானந்தம் உருவாக்கிய கருவியும் இடம்பெற்றுள்ளது.
கைவளையல் வடிவில் உள்ள இந்தக் கருவியானது மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 4-12 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களின் மன நிலையினை உணர்ந்தறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
உருவாக்கப்பட்ட கருவி
மென்மை இதயம் என்ற அர்த்தப்படுத்தலுடன் “கேர் லெஜர் - cœur léger" என்ற பெயரில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கருவி பொருத்தப்பட்ட வளையலை அணிந்திருக்கும் பாதிப்புக்கு உள்ளான சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய மன இறுக்க உளப் பாதிப்புக்கள் கைத்தொலைபேசியில் உள்ள செயலி வழியாக எச்சரிக்கும் திறனைக்கொண்டது.
சுஜீவன் முருகானந்தம் உருவாக்கியுள்ள இந்த கருவியை தெரிவு செய்யும் வகையில் இடம்பெற்ற வாக்களிப்பில் பிரான்சில் உள்ள ஈழத்தமிழர்களும் பங்கேற்று அவரை வெற்றியாளராக தெரிவுசெய்ய பங்களித்தமை குறிப்பிடத்தக்கது.
வழங்கப்பட்ட வெகுமதி
இந்த நிலையில் சுஜீவன் முருகானந்தம் பங்கேற்ற பிரிவில் கிட்டிய 3,849 வாக்குகளில் அவருக்கு 963 வாக்குகள் கிட்டியிருந்தது.
கடந்த 18 ஆந் திகதி பொய்ஸியில் உள்ள அர்மண்ட் பேஜோ மன்றத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சுஜீவன் உட்பட 5 பிரிவுகளின் வெற்றியாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன.
இதன்போது சுஜீவனுக்கு 2000 யூரோ பணமும் வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்