காசாவுடனான எல்லையை திறக்க இஸ்ரேல் அனுமதி: அமெரிக்கா விடுத்த கோரிக்கை
காசாவுடனான எல்லையை திறக்க எகிப்து, இஸ்ரேல், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, ரபா எல்லையை திறப்பதற்கு இஸ்ரேல் அனுமதியளித்துள்ளது.
அதேவேளை, எகிப்து எல்லையை திறந்தால் தாக்குதல் நடத்தக்கூடாது என இஸ்ரேலுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினர்- இஸ்ரேல் இடையே இன்று 15வது நாளாக போர் நீடித்து வருகிறது.இதனிடையே, காசா முனையின் தெற்கு எல்லையில் எகிப்து அமைந்துள்ளமையால் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய உடன் காசாவுடனான எல்லையை எகிப்து மூடியது.
நிவாரண உதவி
இந்நிலையில், காசாமுனை உடனான ரபா எல்லையை எகிப்து இன்று திறந்துள்ளது. இந்த எல்லை வழியாக முதற்கட்டமாக 20 லாரிகளில் நிவாரண உதவி பொருட்கள் காசாமுனைக்குள் நுழைந்துள்ளன.
போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாமுனையில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் பெரும் உதவியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருந்து, உணவுப்பொருட்கள் என பல்வேறு நிவாரண உதவிகள் எகிப்து வழியாக காசாமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் இருந்து ராபா எல்லை வழியாக காசாமுனைக்கு முதற்கட்டமாக 20 லாரிகளில் நிவாரண உதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து உதவி பொருட்களை அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, ரபா எல்லை வழியாக தொடர்ந்து நிவாரண உதவிகளை காசாமுனைக்கு அனுப்பி அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக எகிப்து அதிபர் எல் சிசி தெரிவித்துள்ளார்.