புதையல் தோண்டிய காவல்துறை தலைமை ஒருவரின் மனைவி சிக்கினார்!
அநுராதபுர பகுதியொன்றில் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு நிலத்தில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவரின் மனைவி உட்பட எட்டு பேர் அநுராதபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் ஸ்ரவஸ்திபுராவின் திபிரிகடவல பகுதியில் உள்ள ரத்ரங் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு நிலத்தில் ஒரு குழு புதையல் தோண்டி வருவதாக அநுராதபுரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, அந்த இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் ஒரு பெண் உட்பட எட்டு பேரை கைது செய்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
சந்தேக நபர்கள் பதுளை, மாலிகாதென்ன, பதவி ஸ்ரீபுர, கிரந்துருகோட்டே, வரகாபொல மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அதனைதொடர்ந்து, கைது செய்யப்பட்ட குழுவில் இருந்த பெண்ணை விசாரித்தபோது, அவர் கொழும்பு பகுதியில் உள்ள ஒரு பிரதி காவல் துறை மா அதிபரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட குழுவில் ஒரு பூசாரியும் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சந்தேக நபர்கள் நேற்று (14) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். போதனாக்கு பேரிழப்பு - சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு சத்தியமூர்த்தி இரங்கல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
