எக்னலிகொட வழக்கின் பிரதிவாதிக்கு அநுர வழங்கிய பதவி உயர்வு!
மூத்த பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட வழக்கில் 9 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள லெப்டினன்ட் கர்னல் எரந்த ரதீஷ் பீரிஸ், கர்னல் பதவியிலிருந்து பிரிகேடியராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்னல் எரந்த ரதீஷ் பீரிஸ் என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட சந்தரப்பத்தில் கிரிதலே இராணுவ புலனாய்வு பிரிவின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட லெப்டினன்ட் கர்னல் ஷம்மி குமாரரத்னவின் கீழ் பணியாற்றிய மேஜர் ஒருவர் ஆவார்.
விசாரணை
இந்த வழக்கில் அவரது தொடர்பு குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு பல ஆண்டுகளாக மேற்கொண்ட விசாரணைகளில் ஏராளமான ஆதாரங்களை இணைத்துள்ளது.

2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆரம்பித்த முறையான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, எரந்த பீரிஸ் 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கிரிதலே முகாமில் பணியாற்றியுள்ளார்.
இதேவேளை, இந்த முகாமில் உள்ள புலனாய்வு அதிகாரிகள் பிரகீத் கடத்தல்களில் நேரடியாக ஈடுபட்டதற்கான சான்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் குற்றத்தில் எரந்த பீரிஸ் ஈடுபட்டிருப்பதை நிரூபிக்க குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உள்ள வலுவான ஆதாரம் தொலைபேசி தரவுகளின் பகுப்பாய்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தலைமையகத்திலிருந்து பெறப்பட்ட இரகசிய தகவல்களின்படி, நான்கு மூத்த அதிகாரிகள் இன்று (11.01.2026) முதல் "தற்காலிக பிரிகேடியர்" பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஆவணத்தின்படி, எரந்த பீரிஸுடன் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |