மின்சார உந்துருளிகளை இறக்குமதி செய்ய அனுமதி - விசேட வர்த்தமானி வெளியீடு
மின்சார உந்துருளிகளை உரிமத்தின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானியை ஒன்றை ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் நேற்று (23) இந்த திட்டத்திற்கு அனுமதியை வழங்கியுள்ளார்.
இதன்படி, மின்சார உந்துருளிகளை இறக்குமதி செய்வதற்காக 4000 ரூபாவும் அறவிடப்படும் அதேவேளை, 1000 ரூபாவும் உரிமக் கட்டணமாக அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பொருட்கள் இறக்குமதி
இதேவேளை, நிர்மாணத் தொழிலுக்குத் தேவையான வாகனங்கள், கிரானைட் உள்ளிட்ட பல கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் நேற்று முதல் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இறக்குமதிகள் அங்கீகரிக்கப்பட்ட அடுக்குமாடி திட்டங்கள், கலப்பு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் முதலீட்டு சபையின் கீழ் வராத அரசாங்க திட்டங்களின் கீழ் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இறக்குமதிகளை செய்யும் போது திட்ட அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளவாறு வாகன மற்றும் மூலப் பொருட்களை 180 நாட்களுக்கான வங்கி கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்ய இறக்குமதி கட்டுப்பாட்டாளர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் நிதியமைச்சரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.