மின் கட்டண அதிகரிப்பில் மாற்றமில்லை - இலங்கை மின்சார சபை
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) அனுமதி கொடுக்காவிட்டாலும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
மேற்படி கட்டண அதிகரிப்பிற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான கோரிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அதிகரிக்கப்படவுள்ள மின் கட்டணங்கள் தற்போது கணக்கிடப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் தீர்மானங்கள்
எவ்வாறாயினும், நேற்றுமுன்தினம் (டிசம்பர் 01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, அமைச்சரவையின் தீர்மானங்கள் மின்சார சட்டத்திற்கு அமைவாக அமையுமாயின் ஆணைக்குழுவிற்கு அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்தார்.
அண்மைய கட்டண அதிகரிப்பு இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்று இலங்கை மின்சார சபை கூறியிருந்தது.
இதனையடுத்து, 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு படிகளின் கீழ் மின் கட்டணத்தை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.