மின்சார கட்டணம் தொடர்பில் எச்சரித்த கம்மன்பில
மின்சாரக் கட்டணம் குறைக்கப்படாவிட்டால் மின்சாரசபையை காணாமலாக்குவதற்கு நுகர்வோரான எம்மால் முடியும் என்பதை மறந்து விட வேண்டாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
அத்துடன், வலுசக்தி மாபியாக்களின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து தீர்மானங்கள் எடுக்கப்படும் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று(21.02.2025) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தல் கால வாக்குறுதி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாம் அமைச்சுப் பதவிகளை வகித்த போது, தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு முரணாக செயற்பட்டால் அதற்கெதிராக அமைச்சரவையிலும் குரலெழுப்பியிருக்கின்றோம்.
ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. திரவ எரிவாயு விலை மனு கோரல் தொடர்பில் இறுதியில் நாமே எமது அமைச்சரவைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினோம். இதனால் நாம் அமைச்சுப்பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டோம்.
எரிபொருள் மாபியாக்களே இலங்கையில் மாத்திரமின்றி உலகலாவிய ரீதியில் ஆட்சி கவிழ்ப்பில் பெரும் பங்கினை வகிக்கின்றன. எவ்வாறிருப்பினும் எமது நாட்டிலுள்ள சூழலியல் நிபுணர்களுக்கு இவர்களை எதிர்ப்பதற்குள்ள தைரியம் பாராட்டுக்குரியது. வர்த்தகர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் இதில் தொடர்புபட்டுள்ளனர்.
மின்சார கட்டணம்
வலுசக்தி துறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரைகளை மீட்டிப்பார்த்தால் இதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மின்சார திருத்த சட்டத்தில் முன்னர் காணப்பட்ட 'ஆகக்குறைந்த கட்டணம்' என்ற சொல் 'நியாயமான கட்டணம்' என மாற்றப்பட்டுள்ளது. இது ஆட்சியாளர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. இதுவும் மாபியாக்களின் செயற்பாடே.
சூரிய மின்னுற்பத்தி கட்டமைப்பை ஒவ்வொரு பிரஜைகளும் சுயாதீனமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டால் இலங்கை மின்சாரசபையின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் மின் துண்டிப்பு தொடர்பில் மின்சாரசபையால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் யாரையும் பாதிக்காது. ” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
