மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொது மக்களிடம் கருத்து - நள்ளிரவுடன் முடிவடைந்த காலக்கெடு
மின் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கும் காலக்கெடு நேற்று (18) நள்ளிரவுடன் முடிவடைகிறது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இதுவரை 150 முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், மின் கட்டண திருத்தத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இறுதி செய்யும் பணி
இதனையடுத்து பொது கலந்தாய்வை ஜூலை 28ஆம் திகதி நேரில் நடத்த ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. திருத்தியமைக்க உத்தேசித்துள்ள கட்டணங்களை விவாதித்து இறுதி செய்ய இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியவற்றை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அழைக்கும் என்று ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு கேட்டுக் கொண்டது.
கடைசி திகதி ஜூலை 18
எழுத்துபூர்வ கருத்துக்களைப் பெறுவதற்கான கடைசி திகதி ஜூலை 18 என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் திருத்தம் எந்தவொரு தனி நபரின் விருப்பத்தின்படியும் செய்யப்படாது, மாறாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் முறைப்படி செய்யப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
