மின்சாரக் கட்டண குறைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!
பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்கான செயல்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டு மக்கள் அனைவருக்கும் நியாயமான மற்றும் மலிவான விலையில் மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கெரவலப்பிட்டியவின் சொபதனவி (Sobadhanavi) மின் உற்பத்தி நிலையத்தின் 350 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வு நேற்று (17) நடைபெற்றது.
இலங்கை முதலிடம்
குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி,
“எரிசக்தி துறையில் நுகர்வோர் தேவைகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளுக்கு ஏற்ப உலகம் மாற்றத்தை நோக்கி செல்கிறது.
இத்தகைய உலகளாவிய போக்குகளுக்கு மத்தியில் பிராந்தியத்தில் அதிக மின்சார கட்டணத்தைக் கொண்ட நாடுகளில் இலங்கையானது முதலிடத்தில் உள்ளது.
அரசாங்கத்தின் திட்டம்
பல தசாப்த காலமாக தவறான மற்றும் முறையற்ற நிர்வாகம் காரணமாக படுகுழியில் விழுந்த நாட்டின் பொருளாதாரத்திலிருந்து மீண்டு உற்பத்தி பொருளாதாரத்தை அடைய இந்த அதிகளவான மின்சார கட்டண செலவு ஒரு தடையாக காணப்படுகிறது.
பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சார விலைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கையை மாற்றுவதற்கும், மின் உற்பத்தி, சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களுக்கு மாற்றுவதற்கும் கொள்முதல் மற்றும் ஏல செயல்முறையை செயல்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.” என தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டு மக்கள் அனைவருக்கும் நியாயமான மற்றும் மலிவான விலையில் மின்சாரத்தை வழங்குவதன் மூலம் உற்பத்தியாளர்கள் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த அதிக பங்களிப்பை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
