சுற்றுலா சென்ற தம்பதி மீது காட்டு யானை தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு
கொஸ்லந்த, உடதியலும பகுதியில் நேற்றிரவு (11) வந்து முகாமிட்டிருந்த தம்பதியினர் மீது காட்டு யானை தாக்குதல் மேற்கொண்டதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றைய நபர் பிரதேசவாசிகளால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மாத்தறை கேகனதுரை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஜி.தருஷி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
தாதி மாணவியான உயிரிழந்த யுவதி அடுத்த வாரமளவில் தாதி நியமனம் பெறவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக சிகிச்சை
தாக்குதலுக்கு உள்ளாகி கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கே.ஏ.தனுஷ்க என்ற நபரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
யுவதியை தாக்கிய காட்டு யானை அதே இடத்தில் சுற்றித் திரிந்ததாகவும், அப்பகுதி குழுவுடன் வந்த அனைவரையும் விரட்டியடித்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பின்னர், அப்பகுதி மக்களுடன் இணைந்து காவல்துறையினர் அந்த யானையை விரட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
