சர்ச்சைகளுக்கு மத்தியில் உளவு செயற்கைக்கோள் தயாரிக்க ஆயத்தமாகும் ஸ்பேஸ் எக்ஸ்!
அமெரிக்காவின் ராணுவ தேவைகளுக்கென உளவு செயற்கைக்கோள்களை வடிவமைக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன வடிவமைப்பில் தயாரிக்கப்படவுள்ள இந்த உளவு செயற்கைக்கோள்களானது, பூமியில் நடக்கும் நிகழ்வுகளை துல்லியமாகவும் உடனுக்குடனும் கண்காணிக்கக்கூடிய திறன் கொண்டவையாகவும், எதிரி நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள், பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளை அறிந்து தெரிவிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள்கள் என்பதனால் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் அதிகளவில் செயற்கைக்கோள்களை ஸ்பேஸ்எக்ஸ் விண்ணில் செலுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
ராணுவ செயற்கைக்கோள்
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான பென்டகன் இந்தப் புதிய செயற்கைக்கோள்களை நிறுவுவதன் மூலம், அமெரிக்கா விண்வெளியில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்த முடியும் என எதிர்பார்க்கிறது.
ஏற்கனவே அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் விண்வெளியில் பல ராணுவ செயற்கைக்கோள்களை நிறுவி வைத்துள்ள நிலையில் பென்டகனின் தற்போதைய முயற்சி விண்வெளியில் ஒரு புதிய இராணுவப் போட்டியை உருவாக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் இறையாண்மை
இந்த செயற்கைக்கோள் உருவாக்கம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த செயற்கைக்கோளானது விண்ணில் செலுத்தப்பட்டால் பூமியின் ஒவ்வொரு மூலையும் கண்காணிப்பின் கீழ் வந்துவிடக்கூடும் இதனால் தனி நபர் சுதந்திரம், ஒரு நாட்டின் இறையாண்மை ஆகியவை பாதிக்கப்படும் என்பதாலும் விண்வெளியில் ராணுவ ஆதிக்கம் அதிகரிக்கும் என்பதாலும் இந்த திட்டத்திற்கு பலதரப்பட்டோரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |