வாஷிங்டனில் குற்ற அவசரநிலையை அறிவித்த ட்ரம்ப்: குவிக்கப்பட்ட இராணுவம்
அமெரிக்க (United States) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வாஷிங்டன் நகரத்தில் குற்ற அவசரநிலை அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், ட்ரம்ப் 800 தேசிய பாதுகாப்பு படையினரை (National Guard) நகரம் முழுவதும் நியமித்துள்ளார்.
பாதுகாப்பு படையினர், நகர காவல்துறையினருடன் இணைந்து நினைவுச்சின்னங்கள் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு ரோந்துகள், பெடரல் கட்டிடங்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்பது, போக்குவரத்து கட்டுப்பாடு போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட அமலாக்கம்
அவர்களுக்கு யாரையும் கைது செய்யும் அதிகாரம் இல்லை ஆனால் சட்ட அமலாக்கத்திற்கு உதவும் வகையில் தற்காலிகமாக தடுத்து வைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 14 ஆம் திகதி முதல் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 29 பேர் நாட்டில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது, 1,650 இற்கும் மேற்பட்டோர் இந்த சட்ட அமலாக்க நடவடிக்கையில் பங்கேற்று வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
குற்றங்கள்
வாஷிங்டன் நகரத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்ததையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
DC காவல்துறை தரவுகளின்படி, 2024 இல் வன்முறை குற்றங்கள் குறைந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி, இது அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நகரத்தை மீட்டெடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன் பாதுகாப்பு படையினர், சட்டம் மற்றும் ஒழுங்கு மீண்டும் நிலைநிறுத்தப்படும் வரையில் நகரத்தில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
