ஜப்பானில் வேலைவாய்ப்பு : 100 கோடியை சுருட்டிய பெண் கைது..!
ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து கோடிக்கணக்கான பணத்தை மோசடியாக பெற்ற பெண் ஒருவரை மிரிஹான விசேட மோசடி விசாரணைப் பிரிவினர் இன்று (23) கைது செய்துள்ளனர்.
51 வயதுடைய சந்தேகநபர் கடவத்தை பிரதேசத்தில் தங்கியிருந்து, ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிட்டத்தட்ட 250 பேரிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாவை பெற்று ஏமாற்றியுள்ளார்.
47 பிடியாணைகளுடன் பதுங்கியிருந்த பெண்
பின்னர், வாடிக்கையாளர்களை தவிர்த்து அனுராதபுரம், புத்தளம், குருநாகல் முதலான இடங்களில் பதுங்கியிருந்த நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட மோசடி பிரிவுக்கு இவர் மீது சுமார் 180 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சந்தேகநபருக்கு மஹர நீதவான் நீதிமன்றத்தினால் 36 பிடியாணைகளும், கடுவெல நீதவான் நீதிமன்றினால் 11 பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்தமையால் கைது செய்ய முடியவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பின்னர் நீர்கொழும்பு - ஹலவத்தை வீதியில் வாடகை வீட்டில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நெருங்கிய தொடர்பை பேணிய காவல்துறை உத்தியோகத்தரும் கைது
அவருடன் நெருங்கிய உறவைப் பேணிய வேலை இழந்த காவல்துறை அதிகாரி ஒருவர், அவருக்கு ஆதரவாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |