பிரித்தானியர்களுக்கு ஏற்படவுள்ள கட்டண சுமை
பிரித்தானியாவில் உயர்வடைந்து வரும் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்களை உக்ரைனிய போரின் செலவின் போர்வையில் சாதாரண மக்கள் சுமக்க முடியாதென முக்கிய சக்திவள நிறுவனமான ஒக்டோபஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன் உக்ரைனிய போருக்கு வழங்கப்படும் நிதி எரிசக்தி கட்டணத்தை இன்னும் அதிகமாக உயர்த்தும் என அந்த நிறுவனத்தின் தலைவர் கிறக் ஜக்சன் எச்சரித்துள்ளார்.
பிரித்தானிய மக்களின் சக்திவள செலவீனம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஆண்டொன்றுக்கு 3,582 பவுண்டாக உயரும் எனவும், எதிர்வரும் ஜனவரியில் அது 4,266 பவுண்டாக உயரும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மக்களுக்குரிய நிதி ஆதரவு
இந்த நிலையில், உயர்ந்துவரும் எரிசக்தி கட்டணங்களால் கடுமையாக மக்கள் சிரமப்படுவதால் அரசாங்கம் மக்களுக்குரிய நிதி ஆதரவை இரட்டிப்பாக்க வேண்டும்.
இல்லையென்றால் சக்திவள நிறுவனங்கள் எரிசக்திக்காக வசூலிக்கக்கூடிய தொகையை முடக்க வேண்டும் என ஒக்டோபஸ் சக்திவள நிறுவன தலைவர் கிறக் ஜக்சன் தெரிவித்தார்.
புதிய பிரதமர் பதவியேற்பு
பிரித்தானியாவில் புதிய பிரதமர் செப்டம்பர் 5 ஆம் திகதிக்குப் பின்னர் பதவியேற்றதும், இந்த விடயத்தில் ஒரு முக்கியமான முடிவை எடுக்கவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை, இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் பிராந்தியங்களில் சக்திவள ஆற்றலுக்கு நிறுவனங்கள் வசூலிக்கக்கூடிய உச்ச பட்சத்தொகை அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

