எரிபொருள் - மின்சார நெருக்கடிகளுக்கு என்ன தீர்வு! சபையில் கேள்விக் கணைகளைத் தொடுத்த எதிர்க்கட்சித் தலைவர்
நாட்டின் அந்நியச் செலாவணி பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்ய முடியாத அரசாங்கம், தற்போது நாட்டை கடுமையான எரிபொருள்
நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக, சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடித்தாலும், வீட்டு உபயோக எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்ய, மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தனது உரையில்,
தற்போது, வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப, பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்கு முன் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பபட்டுள்ளது. மேலும்,சில நிரப்பு நிலையங்கள் ஏற்கனவே தங்கள் சொந்த கூப்பன் முறையிலான திட்டங்களில் எரிபொருள் வழங்கத் தொடங்கியுள்ளன.
அண்மைக் காலமாக இலங்கையின் மின்சாரத் தேவை கணிசமாக அதிகரிக்கவில்லை என்றாலும், நாட்டின் நாளாந்த மின்சாரத் தேவையில் 2700 மெகாவோட் உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை விநியோகிக்க முடியாமல் போனதே மின் நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்.
உயர்தர மாணவர்கள் மின்வெட்டுக்கு அல்லது இருட்டுக்கு மத்தியிலேயே பரீட்சையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக மின்சாரம் தடைபடுவதால் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் மற்றும் வளர்ந்து வரும் சுற்றுலாத்துறைக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர்களின் போட்டித்தன்மையான ஊடக அறிக்கைகளைத் தவிர எந்த வித தீர்வும் காண முடியாத அரசாங்கம், இன்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை ஒரு நாளைக்கு சுமார் ஐந்து மணித்தியாலங்கள் இருளில் வைத்துள்ளது.
நெருக்கடியை மேலும் சிக்கலாக்கும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நிதி வழங்குவதில் கடன் வரம்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வர்த்தக வங்கிகளுக்கு மத்திய வங்கி ஆளுநர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் உலக சந்தை விலை இன்று சுமார் 97 அமெரிக்க டொலர்கள் வரை வந்துள்ளதோடு, அது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிய அமைச்சர்கள், துறைமுகத்துக்கு எண்ணெய்க் கப்பல் ஒன்று வந்தடைந்தால் அதனை வரவேற்கும் விழாக்களையே நடத்துகின்றனர்.
மேலும், எரிபொருள் வாங்குவதற்கு போதிய அன்னியச் செலாவணியை திரட்ட முடியாத நிலையை மக்கள் மீதே திணிக்கப்பட்டு, அதிகளவில் மின்சாரம் பாவிப்பதாகவும் அதிகளவு வாகனம் ஓட்டுவதாகவும் கூறி பொதுமக்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கு முன்னுரிமையோ அல்லது குறைந்தபட்ச முகாமைத்துவ அறிவு பயன்படுத்தப்பட்டிருந்தால் நாட்டின் எரிசக்தித் தேவை தொடர்பான சரியான முன்னாயத்த பகுப்பாய்வு அடிப்படையில் திட்டமிடப்பட்ட எரிபொருள் கொள்வனவை நோக்கிச் செல்வதே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய விடயமாகும்.
இதன் பிரகாரம், இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி, பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.
1. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் நாடு எரிபொருளின்றி கடும் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதை அரசாங்கம் ஏற்கிறதா?
2. வாகனங்களுக்கு பயன்படுத்தவென இன்று எத்தனை மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது? இது எத்தனை நாட்களுக்கு போதுமானது? வாகனங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை எதிர்காலத்தில் தட்டுப்பாடு இன்றி தொடர்ந்து வழங்க முடியும் என்பதை அமைச்சரால் உறுதி செய்ய முடியுமா?
3. அனல் மின் நிலையங்களை இயக்க தினமும் எவ்வளவு டீசல் மற்றும் எரிபொருள் தேவைப்படுகிறது? அந்தளவுகளை வழங்க இன்னும் எவ்வளவு காலத்திற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் முடியுமாக இருக்கும்?
4. அடுத்த 3 மாதங்களுக்கேனும் நாட்டுக்குத் தேவையான எரிபொருளைப் பெற எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கணிப்பிடப்பட்டுள்ளதா? அது எவ்வளவு? அதற்குத் தேவையான அந்நியச் செலாவணியை எப்படிப் பெறுவது?
5. தடையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம் இல்லை என்றால், குறைந்த பட்சம் அடுத்த மாதத்திற்காவது மின்சாரத்தை துண்டிக்கும் திட்டவட்டமான ஒழுங்கு அரசாங்கத்திடம் உள்ளதா? அப்படியானால், அது என்ன?
6. கொரோனா தொற்றுநோயால் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள், தொடர்ச்சியான மின்சாரம் இல்லாததால் மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது என்பது அரசாங்கத்திற்கு தெரியாதா? அந்தத் தொழில் துறைகளை நிலைநிறுத்துவதற்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் அரசின் திட்டம் என்ன? இன்னும் எவ்வளவு காலம் மக்கள் இருளில் இருக்க வேண்டி வரும்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
