மின்சார சபை பொறியியலாளர்களின் தீடீர் முடிவு: மேலும் நெருக்கடிக்குள்ளாக்கப்போகும் இலங்கை
இலங்கை மின்சார சபையினைச் சேர்ந்த 100 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தொழில்களில் ஈடுபட முயற்சித்து வருவதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தாங்கள் வெளிநாடு செல்ல உள்ளதாக சில பொறியியலாளர்கள் இலங்கை மின்சார சபைக்கும் தொழிற்சங்கங்களுக்கும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலைமை தொடர்ந்தால் இலங்கை மேலும் நெருக்கடிக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பொறியியலாளர்களுக்கு நல்ல கேள்வி
உலகின் பல நாடுகளில் பொறியியலாளர்களுக்கு நல்ல கேள்வி நிலவி வருவதாகவும் தமக்கும் தமது பிள்ளைகளினதும் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கை மின்சார சபையைச் சேர்ந்த பல பொறியியலாளர்கள் தங்களது கடவுச்சீட்டுக்களை புதுப்பித்துக் கொள்வதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
சேவையை வழங்க முடியவில்லை
இலவச கல்வியின் மூலம் பொறியியலாளர்களாக உருவாகிய தாம் நாட்டுக்கு சேவையாற்ற கனவு கண்ட போதிலும் கடந்த காலங்களில் நாட்டுக்காக நேர்மையான சேவையை வழங்க முடியவில்லை என சில பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் வெளிநாடு செல்ல முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

