காஸாவை நச்சு நிலமாக மாற்றிய இஸ்ரேலின் தாக்குதல்கள்: ஒக்ஸ்பாம் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
இஸ்ரேல் காஸா மீது மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் அந்தப் பிரதேசத்தை நச்சுத்தன்மை நிறைந்த பாழ்நிலமாக மாற்றியுள்ளதாக தொண்டு நிறுவனமான ஒக்ஸ்பாம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் காரணமாக, காஸா நச்சுத்தன்மை நிறைந்த பாழ்நிலமாக மாறியுள்ளதுடன், நச்சுத்தன்மை கொண்ட நீர் மற்றும் மாசடைந்த மண் ஆகியவை அங்கு வசிக்கும் 23 இலட்சம் பலஸ்தீன மக்களின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்ஸ்பாம் மற்றும் மோதல்கள் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இஸ்ரேல் பயன்படுத்திய வெடிபொருட்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய ஆயுதங்கள் காரணமாக காஸாவின் 99 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் சட்டங்கள்
இது தொடர்பில் ஒக்ஸ்பாம் சர்வதேச நிறைவேற்றுப் பணிப்பாளர் அமிதாப் பெஹார் தெரிவிக்கையில், “காஸாவில் இஸ்ரேல் முன்னெடுக்கும் இனப்படுகொலையில், சுற்றுச்சூழலை இலக்காகக் கொண்ட இராணுவத் தாக்குதல்களும் உள்ளடங்குகின்றன.

இவை தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் உயிர்வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமையும் சுற்றுச்சூழல் போர்க்குற்றங்களாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காஸாவை அழித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதன் மூலம், மனிதப் பாதுகாப்புக்கும் உயிர்வாழ்வுக்கும் அவசியமான சுற்றுச்சூழல் நிலைமைகள் அடிப்படையில் சீர்குலைக்கப்படுவதாகவும், இது சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின் கீழ் இஸ்ரேலுக்கு உள்ள சட்டப்பூர்வ கடமைகளை மீறும் செயலாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காஸாவில் வாழும் பலஸ்தீன மக்கள் சுவாசிக்கும் காற்று, உணவு, குடிநீர் மற்றும் மாசடைந்த மண், இடிபாடுகள் ஆகியவற்றுடன் நேரடித் தொடர்பு கொள்வதன் மூலம் பல்வேறு வழிகளில் நச்சுப் பொருட்களுக்கு உள்ளாகி வருவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இஸ்ரேலின் தாக்குதல்களால் கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அழிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியின் காற்று, மண், உணவு மற்றும் நீர் ஆகியனவும் மாசடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன மக்களின் உயிர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளை அடையாளம் கண்டு அவற்றைக் குறைப்பதற்காக முழுமையானதும் சுயாதீனமானதுமான விசாரணை ஒன்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
மேலும், குண்டுவீச்சுகளால் உருவாகும் நச்சுப் பொருட்கள், தீப்பரவல், கட்டட இடிபாடுகள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் ஆகியவை பலஸ்தீன மக்கள் சுவாசிக்கும் காற்று, பருகும் நீர் மற்றும் உட்கொள்ளும் உணவு ஆகியவற்றின் ஊடாக அவர்களின் உடல்களுக்குள் சென்றடையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |