பாவனைக்கு உதவாத பூசணியால் ஏற்பட்டுள்ள அசௌகரியம்(Photos)
வடக்கு, கிழக்கில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள நிலங்கள் பொதுமக்களின் அசமந்த போக்கின் விளைவாக சுற்றுசூழல் சவால்களை எதிர்நோக்கி வருகின்றன.
தமிழர் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் கோஷமிடும் நேரத்தில் ஒரு சில தரப்பினர் பொது நிலங்களை கவனிப்பாரற்று விடுவதும், அக்கறையின்றி செயற்படுவதும் தாயக நிலங்கள் எதிர்கொள்ளும் சவால்களை மேலும் வலுப்படுத்துகிறது.
அந்த வகையில் சிலாவத்தை முள்ளியவளை வீதியும் முல்லைத்தீவு முள்ளியவளை வீதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள சந்தியில் பாவனைக்குதவாத தர்ப்பூசனி (வத்தகைப் பழம்) பழங்கள் கொட்டப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
தோட்டத்தில் இருந்து அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு பொருந்தாது என கருதப்படும் பெருந்தொகையான தர்ப்பூசனி பழங்களே இவ்வாறு கொட்டப்பட்டுள்ளன.
சிலாவத்தையிலிருந்து உடுப்புக்குளம் வரை பரந்துள்ள சுமார் மூவாயிரம் ஏக்கர் தென்னம் தோப்பில் தென்னை மீள் பயிர்ச் செய்கை செயற்பாட்டினை இலகுவாக்குவதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு தென்னம் தோப்பில் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்காக வசதியளித்தது.
தர்ப்பூசனி, நெல், நிலக்கடலை என்பனவற்றை பயிரிடும் விவசாயத்தில் பரவலாக விவசாயிகள் பலர் ஈடுபட்டு வந்தனர்.
தென்னம் தோப்பில் பெருமளவு நிலம் கழிவுகளை கொட்டுவதற்காக இருந்த போதும் இந்த தர்பபூசனி கழிவுகளை இன்று நண்பகல் (14.09.2023) முச்சந்தியில் கொட்டிவிட்டுச் சென்றமை மனதை உறுத்துவதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் நிறுவுனர் நகுலன் கூறியுள்ளார்.
எமது நிலங்கள் அதன் அடையாளங்கள்
பலதரப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டு செயற்பாட்டை சரிசெய்ய முயன்றாலும் இந்த செயற்பாட்டால் அந்த சந்தி துர்நாற்றமாகி அசுத்தமாக வாய்ப்புள்ளது என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு இந்த செயற்பாடு ஏனையோரையும் வீதிகளில் கழிவுகளை கொட்டுவதற்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாக அமைந்து விடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விற்பனைக்கு உதவாத பழங்களை விவசாயிகள் முறையான விதத்தில் அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிடின் இவ்வாறான செயற்பாடுகளினால் காலப்போக்கில் எமது நிலங்களையும் அதன் அடையாளங்களையும் இழக்கும் நிலை ஏற்படகூடும்.