ஈபிடிபியும் NPPயும் திட்டமிட்டு பாதீட்டை தோற்கடித்தன : தவிசாளர் குற்றச்சாட்டு
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் இணைந்து திட்டமிட்டு வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்ததாக ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் நேற்று (24) தோற்கடிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வரவு செலவு திட்டத்தை சமர்பித்தபோது அதனை எதிர்த்து வாக்களித்தவர்களிடம் திருத்தங்களை முன்வைக்குமாறு கோரியபோதும் அதனை செய்யாமல் எதிர்த்து வாக்களித்தனர்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி
சபை வருமானத்தை அதிகரிக்குமாறு கூறுகிறார்கள். ஆனால் வருமானத்தை அதிகரிப்பதற்கு தாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்கிறார்கள். எங்களைத் தேடச் சொன்னார்கள்.

வருமான மூலத்தை கண்டறிய நான் ஒரு குழுவை அமைக்க கோரியிருந்தேன். அதற்கும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. வருமானம் இல்லாத சபையில் வருமான வழிகளை கண்டறிய ஒத்துழைக்கமால் செயற்பட்டால் நாம் என்ன செய்வது?
இத்தனை ஆண்டுகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆண்டு என்ன செய்தது? ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் இணைந்து திட்டமிட்டு வரவு செலவு திட்டத்தை தோற்கடித்துள்ளனர்.
வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பாக நான் அலட்டிக் கொள்ளவில்லை. நாம் தொடர்ந்து முன்செல்வோம்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |