பொதுத் தேர்தலில் ஒன்பது மாவட்டங்களில் ஈ.பி.டி.பி கட்சி: டக்ளஸ் அறிவிப்பு
புதிய இணைப்பு
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி ஒன்பது மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி, கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்ற பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
''வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் கொழும்பு உள்ளடங்கலாக ஒன்பது மாவட்டங்களில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் 1990ம் ஆண்டுகளிலிருந்து Epdp தான் மக்கள் மக்கள் தான் Edpd எனவும் சுயலாப அரசியலுக்காக ஸ்ரான்ட் இல்லாத மோட்டார் சைக்கிள் போல் தேர்தலில் கூட்டு சேரமாட்டோம் எனவும் தேர்தல் முடிந்த பின்பு Epdpயின் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கை பற்றி சிந்திப்போம்'' என தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வீணை சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, இம்முறை வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், கொழும்பு மாவட்டத்திலும் வேட்புமனுக்களை வழங்க கட்சி திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் த.புஸ்பராசா தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுத் தேர்தலுக்குத் தேவையான வேட்புமனுக்கள் தயாரிக்கும் பணிகள் இந்த நாட்களில் நடைபெற்று வருவதாகவும், தனது கட்சி கூட்டணி அமைக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டக்ளஸ் நம்பிக்கை
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனது கட்சி கொழும்பிலும் போட்டியிடும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
மேலும், அதன் போது தான் மீண்டும் நாடாளுமன்றம் செல்வேன் என்றும் நம்பிக்கை வெளியிட்டதோடு, ஆட்சியில் இருப்பவர்களுடன் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் கட்சியின் கொள்கையின்படி இணைந்து செயற்பட உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தமை நினைவுகூறத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |