அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய திட்டம் : நாடாளுமன்றில் அறிவித்தார் ரணில்
இலங்கையில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒன்றிணைத்து சுயாதீன சபையொன்றின் கீழ் அதன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஏனைய சுயாதீன நிதியங்களையும் இதன் கீழ் கொண்டு வருவது தொடர்பில் ஆராயப்பட வேண்டுமென இன்று(4) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
மேலும் உரையாற்றிய அவர், “இலங்கை இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. நாம் அனைவரும் தற்போது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட நம் அனைவக்கும் தற்போது இருப்பது ஒரே அச்சுறுத்தல் தான். இதிலிருந்து வெளிவர முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஏதாவது யோசனைகள் இருக்குமாயின் அதனைச் சொல்லுங்கள்.
இதுவரை யாரும் இவ்வாறான எந்தவொரு யோசனையையும் என்னிடம் சமர்பித்ததில்லை. எனது கொள்கைகளை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்வதால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படலாம்.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒன்றிணைத்து சுயாதீன சபையொன்றின் கீழ் அதன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் விரும்பினால் இந்த திட்டத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிடம் பேசுமாறு நான் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூற விரும்புகிறேன்.
வெளிநாடுகளில் முதலீடு
அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அத்துடன், இந்த நிதியின் ஒரு பங்கை வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட வேண்டுமென நான் நினைக்கிறேன்.
நாட்டின் நிலை மேம்பட ஆரம்பித்துள்ள நிலையில், தற்போது இதனை நாம் செய்ய வேண்டும். மக்களின் சேமிப்புக்களை வெளிநாடுகளில் நாம் முதலீடு செய்ய வேண்டும்.
இரு நிதியத்தையும் ஒரு சுயாதீன சபையின் கீழ் கொண்டு வருவது மற்றும் இதன் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வது குறித்து நாம் கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும். கலந்துரையாடல்களின் மூலம் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை நான் நடைமுறைப்படுத்துவேன்” - என்றார்.