தமிழ் தேசியத்தோடு இளைஞர் அணியையும் ஆதரிக்க வேண்டும்: ஈரோஸ் தலைவர் சுட்டிக்காட்டு
தமிழ் தேசியத்துடன் அபிவிருத்தியையும் அடைவதற்கு இளைஞர் அணியை ஆதரிக்க வேண்டும் என ஈரோஸ் தலைவர் எஸ். துஷ்யந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் (Vavuniya) இன்று (05.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் கட்சிகள் இது முக்கியமான தேர்தல் என்று தெரிவித்து வருவது வழமையாக காணப்படுகிறது.
தமிழ் மக்களுடைய வாக்கு
ஆனால் வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் உள்ள தமிழ் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக தான் உள்ளது.
தமிழ் மக்களுடைய வாக்கு மிகப்பெரும் சொத்தாக மாறி இருக்கிறது. காரணம் தமிழ் தரப்பில் உள்ள கட்சிகள் ஒரு உடன்பாட்டுக்கு வருகின்ற நிலையில் இன்றுவரை இல்லை.
அந்த வகையிலே ஈரோஸும் இம்முறை தனித்துப் போட்டியிட்டு தமிழர் தரப்பில் உள்ள வாக்குகளை ஒரே வழிக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றது.
புதிய தெரு தமிழ் தரப்பு
இந்த நிலையில் தமிழர்களுடைய வாக்குகளை சிங்கள கட்சிகளுக்கு வழங்குவதன் ஊடாக நாங்கள் அடைந்து கொள்ளப் போவது எதுவும் இல்லை என்பதை நாங்கள் வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இளைஞர்கள் ஒரு மாற்றத்திற்கான சந்தர்ப்பத்தை தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த சந்தர்ப்பம் தற்போது கிடைத்திருக்கிறது. அது புதியதொரு தமிழ் தரப்பு இங்கே உருவாக்க வேண்டிய தேவையை எடுத்துக்காட்டுகின்றது.
ஆகவே ஒரு இளைஞர்கள் அணி நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டிய தேவை தற்போது இருக்கின்றது. இளைஞர்கள் மாகாண சபை, நாடாளுமன்றத்துக்கு செல்லுகின்ற போது தான் பிரச்சினைகளை தீர்க்கக் கூடியதாக இருக்கும்.
நாங்கள் அபிவிருத்தியை மட்டும் எமது பிரச்சினையாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தேசியத்தோடும் நாம் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
இளைஞர் அணி
ஆகவே நாங்கள் தேசியத்தையும் அபிவிருத்தியும் ஒன்றாக கொண்டு செல்வதற்கு இளைஞர் அணியை இந்த தேர்தலில் களம் இறக்க வேண்டிய தேவை இருக்கிறது.
ஆகவே நாடாளுமன்றம் சென்றவர்களோ அல்லது தேர்தலில் போட்டியிட்டவர்களோ இல்லாமல் புதிய முகங்களாக இளைஞர்களாக இந்த தேர்தலில் நாங்கள் களமிறங்க இருக்கின்றோம்.
தென்பகுதி மக்கள் தமக்குரிய தலைமையினை தெரிவுசெய்துள்ளனர். கடந்த காலங்களில் தமிழ்த்தேசியம் என்ற நிலைமையினை தக்கவைத்து தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டியிருந்தமையால் நாம் அரசியலில் தீவிரமாக ஈடுபடவில்லை.
தமிழ்த்தேசியம்
இன்று தமிழ்த்தேசியம் சீரழிந்து சிதறடிக்கப்பட்டு மக்கள் கலங்கிய குளத்தில் நீந்துகின்ற மீன்களாக உள்ளனர். பல்வேறு சக்திகளாலும் எமது மக்களின் வாக்குகள் கவரப்படுகின்ற பரிதாப நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
எனவே மக்கள் அனைவரும் ஒரே அணியாக திரண்டு ஈரோஸ் அமைப்பினூடாக போட்டியிடும் பிரதிநிதிகளை தெரிவுசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் கட்சியின் செயலாளர் எ.இ.இராசநாயகம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |