அத்தியாவசிய மருந்துத் தேவைகளை போராட்டத்தின் மூலம் ரணிலுக்கு உணர்த்தும் தாயக மக்கள்!
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் என கோரி சிறிலங்கா அதிபரிடம் கோரிக்கை முன் வைத்து வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில், மன்னாரிலும் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சுற்று வட்டத்தில் இன்று காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கிராமிய கடற்றொழிலாளப் பெண்கள், மாதர் ஒன்றியங்கள், பெண்கள் வலையமைப்பினர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் அமைப்புகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கும் போது,
இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடந்த கால கொரோனா மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் இந்த நேரத்தில் தற்போது மக்களுக்குத் தேவைப்படும் மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் முழுமையாக கிடைக்கப் பெறாத நிலையில் உள்ளது.
இது மக்களின் அடிப்படை சுகாதார உரிமையினை அனுபவிக்க முடியாத நிலையை காட்டுகிறது. மேலும் சாதாரண நோய் மற்றும் சத்திர சிகிச்சைகள் போன்றவற்றிற்கான மருந்துப் பொருட்களும் மருத்துவ சாதனங்களும் தட்டுப்பாடாக உள்ளன.
கிராம மக்கள் பாதிப்பு
நாய், பூனை மற்றும் பாம்பு தீண்டல்களுக்கு மருந்துகள் கிடைக்கப் பெறுவது கடினமாக உள்ளது. அத்துடன் இவ்வாறான தேவைகள் கிடைக்கப் பெறாத எல்லைக் கிராமங்களை அண்டிய பிரதேச வாழ் மக்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.
இதனை நாட்டின் அதிபருக்கு இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மூலம் தெரிவிக்கிறோம் என தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் மன்னார் மெசிடோ பணியாளர்களும் கலந்து கொண்டனர்.









நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா
