இலங்கைக்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படுவதை தடுக்க புதிய திட்டம்
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபரின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
அதனூடாக முப்படையினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினை இணைத்து சுற்றிவளைப்புகளுக்கு அவசியமான திட்டங்களை வகுப்பதற்கான இயலுமை கிட்டும் என்றும் தெரிவித்தார்.
முற்றாக தடுப்பதற்கான கடல்சார் வேலைத்திட்டம்
அண்மையில் மீட்கப்பட்ட 4 பில்லியன் ரூபாய் பெறுமதியான 200 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை கொழும்பு துறைமுகத்தில் இன்று (24) மேற்பார்வை செய்ததன் பின்னரே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறிலங்கா கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட முன்னெடுப்பின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இலங்கையின் கடற்கரை பாதுகாப்பு கப்பல்களை பயன்படுத்தி காலியின் மேற்குப் பகுதியில் 91 கடல் மைல் (168 கி.மீ) தொலைவில் ஆள் கடல் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே மேற்படி ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி போதைப்பொருள் கட்டளை நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்வரும் நாட்களில் அதனை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
நாட்டிற்குள் கொண்டுவரப்படும் போதைப்பொருட்களில் 65% இனை மட்டுமே தடுக்க முடிவதாகவும் ஏனைய 35% போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க, போதைப்பொருள் கொண்டுவரப்படுவதை முற்றாக தடுப்பதற்கான கடல்சார் வேலைத்திட்டம் ஒன்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
