சுமந்திரன் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் முன்னாள் தமிழ் எம்.பி
சுமந்திரன் வாக்கு கேட்டு மக்கள் மத்தியில் பிரச்சாரத்திற்கு செல்ல மாட்டார் என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் (Eswarapatham Saravanapavan) தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) ஒவ்வொரு செயல்பாடுகளும் மக்களுக்கு உதவாத செயற்பாடுகளாகவே காணப்படுகின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நேற்றையதினம் (21.10.2024) நடைபெற்ற ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படை புடை சூழ
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இம்முறை சுமந்திரன் வாக்கு கேட்டு பிரச்சாரத்திற்கு செல்ல மாட்டார். பிரசாரக் கூட்டங்களுக்கு செல்வாராக இருந்தால் இலங்கையில் உள்ள அத்தனை விசேட அதிரடிப்படைகளும் அவரை புடை சூழ செல்ல வேண்டும். அவ்வளவு கோபத்தில் மக்கள் இருக்கின்றார்கள்.
எங்களுடைய தேசியத்தை முழுமையாக தென் இலங்கையின் தேசியத்துடன் கலக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றவர் தான் சுமந்திரன். அதற்குரியாற் போல் தற்போது நடக்கிறது.
தமிழரசு கட்சியில் உள்ள ஒவ்வொருவரையும் வெளியேற்றி விட்டார். தமிழரசு கட்சியில் முக்கியஸ்தராக இருந்த கே.வி.தவராசா கட்சியை விட்டு வெளியேறிய அடுத்த நாள் மாவை சேனாதிராஜா தனது அத்தனை பதவிகளிலும் இருந்து விலகியுள்ளார்.
மாவை சேனாதிராஜா கட்சியின் முதுகெலும்பு என வர்ணிக்கப்பட்டவர். கட்சியை ஒற்றுமையுடன் கொண்டு செல்வதற்கு மிகவும் பாடுபட்டவர். இந் நிலையில் அந்த கட்சியை விட்டு விலகுவதை விட எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.
முதுகெலும்பில்லாத சக்தியலிங்கம்
வேட்பாளர் தெரிவு பட்டியலில் 17 பேர்கள் இருந்தார்கள். ஆனால் தனக்கு சாதகம் இல்லாதவர்களை, முதுகெலும்பில்லாத சக்தியலிங்கமும் சுமந்திரனும் இணைந்து நீக்கிவிட்டு, சுமந்திரன் தன்னுடன் சேர்த்து 9 பேரை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார்.
சர்வாதிகாரம் மிக்கவரால் நியமிக்கப்பட்டவருக்கு வாக்குகள் கிடைக்காது. ஆனால் அவரால் நியமிக்கப்பட்ட ஏழு பேரும் மக்களிடம் சென்று தமக்கு ஒரு விருப்பு வாக்கையும், அவர்கள் சொல்லும் இலக்கத்திற்கு மற்றைய விருப்பு வாக்கையும் போடும்படி கேட்பார்கள்.
அந்த மற்றைய விருப்பு இலக்கம் வேறு யாருடையதும் அல்ல, சுமந்திரனுடையதே. அந்தவகையில் இவர்கள் ஏழு பேரும் விருப்புவாக்கினை கேட்டால் அவர் நிச்சயமாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் அந்த விருப்பு வாக்கு கேட்பவர்களை கேட்கும் ஏனைய ஏழுபேரும் தாங்கள் வெல்லும் நிலையில் இருப்பார்களா என்பது கேள்விக்குறி.
ஏனென்றால் போடப்பட்ட ஏழு வேட்பாளர்களுமே கேள்விக்குரியவர்கள். அத்துடன் அந்த வேட்பாளர்களே வாக்குகளை கேட்பார்களோ தெரியவில்லை. அப்படி கேட்டால் அவர்களுக்கு என்ன நடக்குமோ தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழரசு கட்சியின் மத்திய குழு
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடாது. சஜித் பிரேமதாசாக்கே வாக்களிக்க வேண்டும் என தமிழரசு கட்சியினால் தீர்மானம் எடுக்கப்பட்டது. 41 பேர் இருக்க வேண்டிய தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் 26 பேர் இருந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்கள்.
அந்தத் தீர்மானத்தை மீறி விட்டார்கள் எனக்கூறி எனக்கும், சிறீதரனுக்கும் மேலும் சிலருக்கும் விளக்கம் கோரி கடிதம் அனுப்பி இருந்தார்கள். எனவே சிறீதரன் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தாலும் அந்த கட்சியின் விளக்கத்திற்கு அவர் பதில் கொடுக்க வேண்டும் அதே மத்திய குழு விரும்பினால் சிறீதரனை வைத்திருக்கலாம்.
அல்லது கட்சியின் தீர்மானத்தை மீறி விட்டதாக கூறி கட்சியில் இருந்து நீக்கப்படலாம். இவ்வாறு நீக்கப்பட்டால் சிறீதரன் வெற்றி பெற்றாலும் ஒரு மாதத்தில் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெறிதாக்கப்படலாம்.
அதுமட்டுமல்ல சிறீதரன் மூலமாக காட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் மூலம் கட்சிக்கு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்தால் அது கட்டாயம் சுமந்திரனுக்கு செல்லும்.
ஆகையால் சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வார் சிறீதரன் நாடாளுமன்றம் செல்ல மாட்டார். இலங்கை தமிழரசு கட்சியின் ஒவ்வொரு செயல்பாடுகளும் மக்களுக்கு உதவாத செயற்பாடுகளாகவே காணப்படுகின்றன என ஈஸ்வரபாதம் சரவணபவன் (Eswarapatham Saravanapavan) தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள் - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |