நாட்டில் பிறந்த அனைவருக்கும் எங்கு வாழ்வதற்கும் உரிமையுள்ளது!
இந்த நாட்டின் பிரஜை என்றவகையில் எந்த ஒரு பகுதியிலும் வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன (S. M. Chandrasena) தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்ட காணிப்பிரச்சினைகள் தொடர்பான நடமாடும் சேவை ஒன்று வவுனியாவில் இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
"இன மத வேறுபாடில்லாமல் வடபுலம், தென்புலம் என்ற பேதங்கள் இல்லாமல் இந்த காணி தொடர்பான விடயங்களையும், பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
இங்கு வாழ்கின்ற பொதுமக்கள் என்ற வகையில் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு இந்த நாட்டிலே எந்த ஒரு இடத்திலும் குடியிருப்பதற்கும், வீடொன்றை கட்டுவதற்கும், வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கும் உரித்து இருக்கின்றது.
இந்த விடயத்தில் எந்த வேறுபாடுகளும் பார்க்க முடியாது. அனைவருமே சமமாக மதிக்கப்பட வேண்டும். காணி என்ற விடயம் மிகவும் முக்கியமானது. அதன் ஆவணங்கள் என்பது ஒருவரது வாழ்வின் பல்வேறு தேவைகளுக்கு முக்கியமாக காணப்படுகின்றது.
வடக்கு மக்களை நாம் கவனிப்பதில்லை என்ற குறைபாடு சொல்லும் கருத்துக்களும் உண்டு. அந்த கருத்துக்களுக்கு ஒருபோதுமே இடமில்லை. காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான இந்த நடமாடும் சேவை முதல் முதலில் வடபிரதேசத்தில் ஆரம்பித்து வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மொழியிலே உங்களோடு உரையாட முடியாததையிட்டு மனவருத்தம் அடைகின்றேன். அனைவருக்கும் பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றை நாம் இனம் கண்டு அதனை சாதகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும்என்ற அடிப்படையில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்ப்பாடுசெய்யப்பட்டுள்ளது.
எனவே பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வதற்காக வருகைதந்த உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றேன்" என மேலும் தெரிவித்துள்ளார்.
