முன்னாள் மொட்டு கட்சி எம்.பியிடம் இரண்டரை மணி நேர வாக்குமூலம்!
முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக் என்பவருடன் தொடர்புகளைப் பேணி பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், நேற்றைய தினம் (03-09-2026) அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அருந்திக பெர்னாண்டோ சுற்றுலாத்துறை பிரதி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தெஹிவளை - கல்கிஸ்ஸ கடலோரப் பகுதியில் சட்டவிரோத விடுதிகளை நிர்மாணிப்பதற்கு ஷிரான் பாசிக்கு உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் மற்றும் மேலும் சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சரிடம் தொடர்ந்து வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தெஹிவளை - கல்கிஸ்ஸ கடற்பகுதியில் ஷிரான் பாசிக்கு சொந்தமான சுமார் 20 உணவகங்கள் மற்றும் விடுதிகள் அமைந்துள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை சட்டவிரோதக் கட்டுமானங்கள் என்பதுடன் வேறு நபர்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
பல்வேறு சலுகை
இந்தச் சட்டவிரோத விடுதிகளைக் கட்டுவதற்கு அரசியல்வாதிகளின் முழுமையான ஆதரவு போதைப்பொருள் கடத்தல்காரருக்குக் கிடைத்துள்ளதாக விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஷிரான் பாசிக்கு சொந்தமான 1000 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பெருமளவிலான சொத்துக்கள் தொடர்பில் தனியான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

ஷிரான் பாசிக்குடன் தொடர்பைப் பேணி பணத்தையும் பல்வேறு சலுகைகளையும் பெற்றதாகக் கூறப்படும் மேலும் பல அரசியல்வாதிகளை வரும் நாட்களில் விசாரணைக்கு அழைக்க மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் திட்டமிட்டுள்ளது.
டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக், மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |