இராணுவத்தில் பணியாற்றிய பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி: அதிர்ச்சி தகவல்
பஹல்காம் (Pahalgam) தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி பாகிஸ்தான் (Pakistan) இராணுவத்தில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
காஷ்மீரின் (Kashmir) பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கை உருவாக்கியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின், நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தான் இராணுவம்
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சுலைமான் என்கிற ஹாஷிம் மூசா, தல்ஹா பாய் என்ற அலி பாய் ஆகிய 2 பாகிஸ்தானியர்கள் மற்றும் அப்துல் ஹுசைன் தோகர் என்ற ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவரின் வரைபடத்தையும் காவல்துறை வெளியிட்டது.
இந்த நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பாகிஸ்தானை சேர்ந்த சுலைமான் என்கிற ஹாஷிம் மூசா, இதற்கு முன்னதாக பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பு சேவை குழு (SSG) எனப்படும் பாகிஸ்தானின்ராணுவத்தின் சிறப்பு குழுவில் ஹாஷிம் மூசா பணியாற்றி பல்வேறு சிறப்பு பயிற்சிகளை பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் அரசு
இந்த SSG கமாண்டோக்கள் அதிநவீன ஆயுதங்களை கையாள்வதிலும், ரகசிய தாக்குதல் நடத்துவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். மேலும், இக்கட்டான சூழலிலும் உயிர்வாழும் திறன்களைக் கொண்டிருப்பார்கள்.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் காஷ்மீரைச் சேர்ந்த 15 நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மூசாவின் ராணுவ பின்னணி உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு இந்த தாக்குதலுக்கு எங்களுக்கும் தொடர்பு இல்லை என மறுத்து வந்த நிலையில், பாகிஸ்தான் இராணுவத்தை சேர்ந்த முன்னாள் வீரர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
