சர்ச்சையை ஏற்படுத்திய ரணிலின் லண்டன் விஜயம் : வழக்கு விசாரணை குறித்து வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) , லண்டன் சென்ற போது அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த வழக்கு விசாரணையானது மன்றாடியார் நாயகம் விராஜ் தயாரத்னவின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சட்ட மா அதிபர், இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிணையில் செல்ல அனுமதி
இந்த வழக்கை, மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரில் நெறிப்படுத்தி வரும் நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கான லண்டனுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணை அதிகாரிகளால் பெறப்பட்ட ஆவணங்கள் இதுவரை சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, லண்டனில் உள்ள வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கான ரணில் விக்ரமசிங்க சென்றிருந்தபோது, 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |