நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமை ஒழிக்கப்படும் - சஜித் பிரேமதாச
ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதுடன், வரம்பற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையையும் முற்றாக இல்லாமல் ஒழிக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்த ஐக்கிய கமத்தொழிலாளர் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தெஹியத்தகண்டி நகரில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவு வழங்குமாறு பொதுமக்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச தலைவர், பிரதமர், அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் என அனைத்துப் பதவிகளையும் தமது குடும்ப வயிற்றை நிரப்பிக்கொள்வதற்கான தொழிலாக ராஜபக்சக்கள் கருதிக்கொள்ளக்கூடாதென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டு மக்களின் நலன் மேம்பாட்டிற்காவே மக்கள் இந்தப் பதவிகளை வழங்குகிறார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீர்கெட்ட ராஜபக்ச ஆட்சியின் முடிவு மிக அருகில் உள்ளதாகவும், நாட்டையும் மக்களையும் அழிவுக்கு இட்டுச் சென்ற ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பொது மக்கள் அணிதிரண்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
