இந்து மயானத்துக்காக கிழக்கு ஆளுநரால் காணி கையளிப்பு
திருகோணமலை (Trincomalee) - தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவின் பத்தினிபுர கிராம மக்களுக்கான இந்து மயானத்துக்கான காணி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் ( Senthil Thondaman) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (12) மாலை பத்தினிபுர கிராமத்தில் வைத்து மக்களிடத்தில் உரிய ஆவணங்களுடன் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 25 வருடகாலமாக இந்து மயானம் இன்றி வாழ்ந்த மக்களுக்காக தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமான கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள காணியே இவ்வாறு இந்து மயானத்துக்காக ஒப்படைக்கப்பட்டது.
சாதகமான நடவடிக்கை
இதில் தம்பலகாமம் பிரதேச சபை செயலாளர் உட்பட பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நீண்டகாலமாக நிலவிய இந்து மயான பிரச்சினைக்கு பத்து நாட்களுக்குள் தீர்வு பெற்று தந்த கிழக்கு மாகாண ஆளுநருக்கு மக்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.
இதன் போது திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்து நகர் கிராம மக்களும் தங்கள் வயல் நில குடியிருப்பு பகுதிகளை இலங்கை துறைமுக அதிகார சபையினர் கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பில் உரிய சாதகமான நடவடிக்கை எடுப்பதாக மக்களிடத்தில் ஆளுநர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |