ஐ.நா முன்றலில் கண்காட்சி மற்றும் கவன ஈர்ப்பு நிகழ்வு (படங்கள்)
ஐ.நா 49ஆவது கூட்டத் தொடரின் இறுதி வாரத்தில் (31மார்ச் தொடக்கம் 1ஏப்ரல் வரை) பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து சுவிஸ் தமிழர் செயற்பாட்டு அமைப்பினர் ஜெனீவா ஐ.நா முன்றலில் நடாத்திய கண்காட்சி மற்றும் கவன ஈர்ப்பு நிகழ்வினை சுவிஸ் வாழ் இளையவர்கள் முன்நின்று பொறுப்பேற்று நடத்தியிருந்தனர்.
இதில் பல்வேறு நாட்டவர்கள் வருகை தந்து, அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிழற்படங்களினையும் விபரங்களையும் பார்வையிட்டு, நுணுக்கமான பல விடயங்கள் குறித்து அங்கு நின்ற ஸ்ராக் (STAG) இளையோர்களிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலநிலை சீரற்ற நிலையிலும், பனிப்பொழிவின் மத்தியில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு நிகழ்வில் இலங்கையில் தொடரும் தமிழினப் படுகொலை பற்றியும், இலங்கையில் சீனாவின் தலையீடு பற்றியும், சர்வதேசத்திற்கு சொல்லவேண்டிய செய்திகளை கவன ஈர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் பலர் பதாதைகள் மூலம் வெளிப்படுத்தினர்.
அத்துடன் ஐ.நா மனித உரிமைக் கழக ஆணையாளர் அலுவலகம் உட்பட முக்கியமான நாடுகளைச் சந்தித்து கடந்த 46/1 தீர்மானத்தின் அமுலாக்கல் குறிப்பாக சாட்சியம் திரட்டும் பொறிமுறையின் நடைமுறைகள் பற்றியும் செப்டம்பர் 2022இல் வரவுள்ள புதிய தீர்மானம் ஒன்றில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினர்.







