வெளிநாடொன்றில் உக்ரைன் தொழிலதிபரை இலக்குவைத்து குண்டுத்தாக்குதல்
உக்ரைன் நாட்டைப் பூா்வீகமாகக் கொண்ட தொழிலதிபரைக் இலக்குவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவா் மற்றும் அவரின் குடும்பத்தினா் இருவா் காயமடைந்தனா்.
உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் ஐரோப்பிய நாடான மொனாக்கோவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ் எல்லைக்கு அருகே அமைந்துள்ள ஆடம்பர குடியிருப்பின் நுழைவுவாயிலில் திங்கள்கிழமை நள்ளிரவில் இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
அடையாளம் தெரியாதவரால் வைக்கப்பட்ட பார்சல் வெடிகுண்டு
அடையாளம் தெரியாத நபா் ஒருவா் ‘பாா்சல்’ வெடிகுண்டை வைத்துவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில், அங்கு வந்த மூவா் மீது குண்டு வெடித்துள்ளது.

தாக்குதல் நடத்திய நபா் அண்டை நாடான பிரான்ஸுக்குத் தப்பியோடியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை முயற்சி எனவும், பயங்கரவாதத் தாக்குதல் அல்ல எனவும் காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் கட்டுமானத் தொழிலதிபரும், செல்வந்தருமான வாடிம் எா்மோலேவ் மட்டுமின்றி அவரின் மனைவி மற்றும் 13 வயது மகனும் காயமடைந்தனா். இதில் வாடிம் எா்மோலேவ் மற்றும் அவரின் மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அரசால் பொருளாதாரத் தடை
கடந்த 2019-இல் சைப்ரஸ் நாட்டு குடியுரிமை பெற்ற வாடிம் எா்மோலேவ், ரஷ்யாவுடன் வணிகத் தொடா்புகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 2023-ஆம் ஆண்டு உக்ரைன் அரசால் பொருளாதாரத் தடைகளை எதிா்கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மொனாக்கோவில் இதுபோன்ற ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல்முறையாகும். மொனாக்கோ மக்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தாக்குதல் சம்பவத்தை ‘மிகவும் கொடூரமான செயல்’ என்று அந்நாட்டு இளவரசா் ஆல்பா்ட் வன்மையாகக் கண்டித்துள்ளாா்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்