குடத்தனைப் பகுதியில் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு - குடத்தனையில் கடற்கரைப் பகுதியிலுள்ள பொதுக்காணி ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் பருத்தித்துறை காவல்துறையினரால் நேற்று(23) மீட்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் நீலநிற பிளாஸ்டிக் எண்ணெய் கொள்கலன் ஒன்றில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இயங்கு நிலையில் காணப்பட்டன

இதன்போது மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கி என்பன உயிர்த்த்துடிப்புடன் இயங்கு நிலையில் காணப்பட்டதாக பருத்தித்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்கே தெரிவித்தார்.
இதன்போது ரி- 56 ரக துப்பாக்கி இரண்டு, அதற்கான மகசின் எட்டு, 30 பொட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 750 தோட்டாக்கள் மற்றும் 82 ரக கையெறிகுண்டு - 08 என்பன மீட்கப்பட்டுள்ளன.
வடமாகாண சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் மஹிந்த குணரட்னே, யாழ்மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் மஞ்சுள செனரத், காங்கேசன்துறை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சந்தன ஹமகே, உதவி காவல்துறை அத்தியட்சகர்களான ஹேமந்த விஜயரட்ண, டயல் இலங்ககோன் ஆகியோரின் வழிகாட்டுதலில் பருத்தித்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையில் பருத்தித்துறை காவல்துறையினர் குறித்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த வெடிபொருட்கள் போர்க்காலத்தில் புதைத்து வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
