கோட்டா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை - வெளியிடப்பட்ட அறிக்கை!
தனிப்பட்ட தேவைக்காக அரச வாகனங்களை பயன்படுத்தியமை, உணவுக்காக பெருந்தொகை பணத்தை செலவிட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த குற்றசாட்டுக்கள் பொய்யானவை எனவும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் செயல் எனவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனை, கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் ராஜபக்ச சுகீஸ்வர பண்டார ஊடாக முன்னாள் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டு
கோட்டாபய ராஜபக்ச அதிபராக இருந்த காலப்பகுதியில் தனது தனிப்பட்ட பாவனைக்காக 19 வாகனங்களை பயன்படுத்தியதாகவும் உணவுக்காக 950,000 ரூபாவை செலவிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குற்றசாட்டுக்கள் பொய்யானவை
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எந்த வாகனத்தையும் தவறாகப் பயன்படுத்தவில்லை எனவும், அரச பணத்தை தேவையற்ற விடயங்களுக்காக செலவளிக்கவில்லை எனவும் சுகீஸ்வர பண்டார தனது அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிபருக்காக ஒதுக்கப்பட்ட பிரத்தியேக வாகனங்கள் அரச கொண்டாட்டங்களை தவிர்த்து தனிப்பட்ட எந்த தேவைக்காகவும் பயன்படுத்தப்படவில்லை என அவர் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

