தமிழருக்கு எதிரான சக்திகளின் போலி பிரசாரம் - அம்பலப்படுத்திய இராதாகிருஷ்ணன்
இலங்கையின் அரசியலமைப்பில் இடம்பிடித்துள்ள 13 ஆவது திருத்த சட்டத்தை விரைந்து முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
ஹட்டனில் உள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 தொடர்பில் போலி பிரசாரம்
தமிழர்களுக்கு எதிரான சில சக்திகளே 13 தொடர்பில் போலி பிரசாரத்தை முன்னெடுத்துவருகின்றன. இவற்றை அரசு கருத்திற்கொள்ளாது, சர்வதேச உடன்படிக்கையான 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்.
13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள காவல்துறை, காணி அதிகாரங்கள் தொடர்பில் போலியான விம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்லாது, 9 மாகாணங்களும் அதன்மூலம் பயன்கிட்டும்.
அதிகாரங்கள் இல்லாத மாகாண சபைகள்
லண்டன், மலேசியா போன்ற நாடுகளில் உள்ளூராட்சி சபைகளுக்கு உள்ள அதிகாரங்கள்கூட, எமது நாட்டில் உள்ள மாகாணசபைகளுக்கு இல்லை. உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து எதிர்வரும் 10 ஆம் திகதியே உறுதியான முடிவுக்கு வரமுடியும்.
காணி உரிமை மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மலையக அடையாளங்கள் அவசியம். அவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மலையக - 200 நிகழ்வில் இதனை வலியுறுத்துவோம். அத்துடன், மலையகம் 200 நிகழ்வுக்கு தமது நாட்டின் சார்பில் சிறப்பு பிரதிநிதி ஒருவரை இந்தியா அனுப்பும் என்றார்.