பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் : எழுந்துள்ள கண்டனம்!
பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அத்தனையும் பொய்யானவை எனவும் அவ்வாறு உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாகவும் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மீது முனை பகுதி கடற்றொழிலாளர் சங்கம், விளையாட்டு கழகம் என்பவற்றை சேர்ந்தவர்களால் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்திய நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் ஊடகசந்திப்பு இடம்பெற்றிருந்தது.
வன்மையான கண்டனம்
இது குறித்து கருத்து தெரிவித்த பருத்தித்துறை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எம்.இராஜகுமார், “செந்தோமஸ் தேவாலயத்திற்கு முன்பாக உள்ள விளையாட்டு திடல் பகுதியில் மணல் இட்டு நிரப்பும் விடயம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த இடம் செந்தோமஸ் தேவாலயத்திற்கு உரித்துடையதாகும். அதற்கு விளையாட்டு கழகம் உள்ளிட்ட எவருக்கும் உரிமை இல்லை. சிலர் குறுகிய நோக்கத்திற்காக இந்த விடயத்தை தவறாக கையாண்டு வருகின்றனர்.
குறித்த விடயம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் கதைக்கப்பட்டது. கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினரே தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வடமராட்சி வடக்கு க.தொ.கூ.சங்கங்களின் சமாசத்தின் முன்னாள் தலைவர் இக்கினேசியஸ் அருள்தாஸ், “பருத்தித்துறை நகரசபை தவிசாளர் என் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
திறந்து வைக்கப்பட்ட சிறுவர் மகிழ்வகம்
அவ்வாறான சம்பவம் இடம்பெறவே இல்லை. எங்கள் இருவருக்குள்ளும் பிரிவை ஏற்படுத்தவே இவ்வாறு பொய் சொல்லியுள்ளார். ஊருக்கு நல்லது செய்யும் தவிசாளர் மீது வேண்டும் என்றே பொய்க்குற்றச்சாட்டுகளை சிலர் சுமத்தியுள்ளனர்.
கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை பழைய மாணவர் சங்க தலைவர் இராசநாயகம், “பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இலஞ்சம் வழங்கிதான் பதவிக்கு வந்ததாக கூறுவது உண்மைக்கு மாறானது. இதனை வன்மையாக கண்டிக்கின்றேன்.
எமது கிராமத்துக்கு மட்டுமல்ல அயல் கிராமங்களில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாதாந்தம் ஐம்பதாயிரம் வழங்கி வருகின்றார்.
நாம் கோரியடி முனை பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட சிறுவர் மகிழ்வகம் நகரசபை நிதியில் அமைக்கப்படவில்லை. நகரசபை தவிசாளரது அயராத முயற்சியில் தான் அது அமைக்கப்பட்டது.” என தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
