மட்டக்களப்பில் காணாமல் போயுள்ள குடும்பஸ்தர்: பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை
மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 26ம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளதாக மட்டு தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நகரிலுள்ள உணவகத்தில் வேலை செய்து வந்த புதூரைச்சேர்ந்த 56 வயதுடைய கணேஸ் விக்கினேஸ்வரன் என்பவரே காணாமற் போனவராவார்.
மாமாங்கேஸ்வரர் உற்சவத்தில் உணவு கடையில் வேலை
கடந்த 19ம் திகதி வழமைபோல வீட்டில் இருந்து உணவகத்திற்கு வேலைக்கு சென்றவர் அன்று வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தொடர்பு கொண்ட போது மாமாங்க கோவில் உற்சவத்தையிட்டு தான் வேலை செய்யும் முதலாளி உணவு கடை அமைத்துள்ளதாகவும் அங்கு நிற்பதாக தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் கடந்த 26 ம் திகதி முதலாளி சம்பளம் தரவில்லை தந்ததும் வருவதாக தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் கோவில் உற்சவம் முடிவுற்ற பின்னர் அவரின் தொலைபேசி செயலிழந்திருந்ததுடன் அவர் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடியும் அவரை காணவில்லை என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்
காவல்துறையினர் பொதுமக்களிடம் விடுத்த கோரிக்கை
எனவே இந்த புகைப்படத்தில் இருப்பவர் தொடர்பாக தகவல்கள் கிடைத்தால் உடனடியாக மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையத்திற்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
