காவல்துறையினரின் முன்னிலையில் பண்ணையாளர்களை அச்சுறுத்திய பிள்ளையானின் மோட்டார் சைக்கிள் அணி!
மட்டக்களப்பு மாவட்ட மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வீதியால் வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தினப் பேரணி மோட்டார் சைக்கிள் அணியினர் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட காட்சிகள் பண்ணையாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவம் தொழிலாளர் தினமான இன்று(1) இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினருக்கு முன்னாலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மோட்டார் சைக்கிள் அணியினர் நடந்து கொண்ட காட்சிகள் யுத்த காலத்தை நினைவு படுத்துவதாக இருந்தது.
பிள்ளையானின் மோட்டார் சைக்கிள் அணி
குறித்த சம்பவத்திற்கு முகங்கொடுத்த பண்ணையாளர்கள், “எங்களது வயிற்றுப் பசிக்காக எமது வாழ்வாதாரத்திற்காக போராட்டம் நடத்துகிறோம். இதனால் யாருக்கு என்ன பாதிப்பு நாங்கள் அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையான் அண்ணனுக்கு எதிரானவர்கள் அல்ல அவருக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவும் இல்லை.
ஆனால் அவரது மேதின பேரணியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களை முறுக்கி எம்மை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.
காவல்துறையினர் இல்லை என்றால் எம்மீது தாக்குதல் நடாத்தி இருப்பார்கள். நாங்கள் எங்களது வயிற்றுப் பிழைப்புக்காக போராடுகிறோம், இன்று கூட இரண்டு பண்ணையாளர்களை வனஜீவராசிகள் திணைக்களம் கைது செய்துள்ளது. அவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.
அமைதியான முறையில் போராட்டம்
இவ்வாறு எங்களது வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது . இதனை அதிபரின் கவனத்திற்கு எதிராக கொண்டு செல்வதற்காக 231 ஆவது நாளாக இன்றைய மே தினத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடாத்தும் எங்களை ஏன் இவர்கள் அச்சுறுத்த வேண்டும்.
வயிற்றுப் பசிக்காக வந்த எங்களை ஏன் அச்சுறுத்துகிறீர்கள் நாங்கள் யார்? நாங்களும் தமிழர்கள் தானே? நாங்களும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தானே ஏன் எங்களுடன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்” என கேள்வி எழுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |