திருகோணமலையில் தீ வைக்கப்படும் வைக்கோல்கள்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
திருகோணமலையில், வைக்கோலுக்குத் தீ வைப்பதால் கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திருகோணமலை நெல் அறுவடை முடிந்துள்ள நிலையில், வயல்வெளிகளில் விவசாயிகள் வைக்கோலுக்குத் தீ வைக்கும் வழக்கம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்தநிலையில், கந்தளாய், வான் எல, வட்டுக்கச்சி மற்றும் தம்பலகாமம் போன்ற பகுதிகளில் இந்த நடைமுறை, கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகள்
அறுவடைக்குப் பிறகு மிஞ்சியிருக்கும் வைக்கோல், அப்பகுதியில் உள்ள கால்நடைகளின் முக்கிய உணவாக உள்ளது.
இருப்பினும், விவசாயிகள் வைக்கோலுக்குத் தீ வைப்பதால், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் உணவின்றித் தவித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு
வைக்கோல் எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டம், அருகிலுள்ள வீதிகளையும் கிராமங்களையும் சூழ்ந்து கொள்வதனால், வீதிகளில் வாகனங்கள் செல்வது கடினமாகி, போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த புகை கிராம மக்களுக்கும் மற்றும் சுவாசப் பிரச்சனைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண, காவல்துறையினர் மற்றும் விவசாயத் திணைக்களம் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க, வைக்கோலை முறையாக அப்புறப்படுத்தவோ அல்லது மாற்று வழிகளில் பயன்படுத்தவோ விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
