உரக் கொள்வனவு தொடர்பில் விவசாய அமைச்சின் முக்கிய அறிவித்தல்!
சிறுபோக நெற்செய்கைக்கான உரங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் வவுச்சரில் எந்த வகையான உரத்தையும் கொள்வனவு செய்யலாம் என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பயிர்ச்செய்கைக்கு 30% சேதன உரங்களையும், 70% இரசாயன உரங்களையும் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட சில உரங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் என அண்மைய நாட்களில் இரண்டு மாவட்டங்களின் விவசாயிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு அவர் மேற்கண்டவாறு மறுப்பு தெரிவித்துள்ளார்.
உரக் கொள்வனவு
மேலும்,
"இந்த சிறுபோக காலத்தில் உரங்களை கொள்வனவு செய்வதற்கு மானியமாக அரசினால் வழங்கப்படும் வவுச்சர்கள் மூலம் விவசாயிகள் தமது விருப்பத்தின் அடிப்படையில் இரசாயன அல்லது சேதன உரங்களை கொள்வனவு செய்ய முடியும்.
அதேவேளை சிறுபோக பருவத்தில் பயிர்ச்செய்கைக்காக 70% இரசாயன உரங்களையும் 30% சேதன உரங்களையும் பயன்படுத்துவதற்கு அமைச்சு எந்தவிதமான பரிந்துரைகளும் செய்யவில்லை.
இதன்படி, விவசாயிகள் தமது விருப்பத்திற்கேற்ப உரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுகிறது.
மேலும், இரண்டு அரச உர நிறுவனங்களால் வழங்கப்படும் இரசாயன அல்லது சேதன உரங்களை கமநல சேவை திணைக்களங்களில் இருந்தும், தனியாரிடமிருந்தும் விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கொள்வனவு செய்ய முடியும்." என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
