நாடாளுமன்ற உறுப்பினர் பௌசிக்கு இறுகுகிறது பிடி -வெளிநாடு செல்லவும் தடை
நெதர்லாந்து நன்கொடையாக வழங்கிய சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வாகனத்தை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தி அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட 10 இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் நேற்று (24ஆம் திகதி) குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
மேலும் வழக்கு விசாரணை முடியும் வரை நீதிமன்ற அனுமதியின்றி அவர் வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாஸ்போட் முடக்கம்

குற்றம் சாட்டப்பட்டவரின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறும், அவரது கைரேகைகளை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டார்.
பூர்வாங்க ஆட்சேபனை

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக முன்னிலையான அதிபர் சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுவித்துள்ளதால், மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், பூர்வாங்க ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
எழுத்துமூலமான பூர்வாங்க ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்காக வழக்கை மார்ச் 15ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உயர் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டார்.