“உண்மையை வெளியிட்டால் தலை துண்டிப்பு” கோட்டாபயவின் நடவடிக்கையால் அச்சநிலை
நாட்டின் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தும் அரச ஊழியர்களின் தலையை துண்டிக்கும் வகையிலேயே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் நடவடிக்கை அமைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன ( Ruwan Vijayawardena) விமர்சித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர், இலங்கையில் அடுத்த ஆண்டு பஞ்ச நிலைமை ஏற்படும் என்ற உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தினார் என்ற அடிப்படையிலா?, விவசாய அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து பேராசிரியர் உதித் கே.விஜேவர்தன நீக்கப்பட்டார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் அசேதன உரப் பாவனையை தடைசெய்ததன் மூலம் நாட்டின் நெல் மற்றும் ஏனைய தானிய உற்பத்திகள், 25 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் உதித் கே.விஜேவர்தன தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்தை வெளியிட்டு, 24 மணித்தியாலத்திற்குள் விவசாய அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து பேராசிரியர் உதித் கே.விஜேவர்தனவை அரச தவைவர் கோட்டாபய ராஜபக்ச நீக்கியிருந்தார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் அரச ஊழியர்களை ஊக்கமிழக்கச் செய்யும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாய அமைச்சின் செயலாளர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரோ, எதிர்க்கட்சியை சேர்ந்தவரோ இல்லை எனவும், அரச தலைவரை ஆட்சிக்கு கொண்டுவர உதவிய வியத்மகவின் ஸ்தாபகர்களில் ஒருவர் எனவும் ரூவன் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.