பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல் : அரசு எடுத்துள்ள நடவடிக்கை
இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார அமைச்சு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த மகளிர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, இந்த யோசனையை "திறமையான மற்றும் மிகவும் அவசியமான ஒன்று" என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம்
ஏனைய தெற்காசிய நாடுகளுடன் (உதாரணமாக பாகிஸ்தான்) ஒப்பிடுகையில், இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்களை அதிகளவில் வேலைவாய்ப்புச் சந்தையில் இணைத்துக்கொள்ள முறையான திட்டங்கள் நாட்டுக்குத் தேவை என்றும், இந்த முன்மொழிவு மிகவும் முற்போக்கானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அமைச்சரவை மட்டத்தில் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
உற்பத்தித்திறனை அதிகரிப்பு
இந்த யோசனையை ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சமிந்ரனி கிரியெல்ல முன்வைத்தார்.

பெண்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிப்பதன் மூலம், நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பை கணிசமாக அதிகரிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்கள் குடும்பப் பொறுப்புகள் காரணமாக வேலைக்குச் செல்வதில் எதிர்கொள்ளும் சவால்களைக் குறைப்பதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் இது ஒரு தீர்வாக அமையும் என்று அவர் வாதிட்டார்.
you maylike this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |