மீன் கழிவுகள் மூலம் உரத் தயாரிப்பு - தொழிற்சாலைக்கு எதிராக நீர்கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
நீர்கொழும்பு பிட்டிப்பனை பிரதேசத்தில் இன்று முற்பகல் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
பிட்டிப்பனை பிரதேசத்தில் உள்ள மீன்களின் கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் தொழிற்சாலையை அங்கிருந்து அகற்றுமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
குறித்த உரத்தொழிற்சாலை காரணமாக சுற்றாடலில் துர்நாற்றம் வீசுவதாகவும் மீன்களின் கழிவுகளால் சூழல் மாசடைந்துள்ளதாகவும் , மீன்களின் இனப்பெருக்கத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக மீனவர்களின் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது போன்று பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து மீனவர்கள் வீதியை மறித்து பல மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக வாகன போக்குவரத்து தடைப்பட்டது.
'மூச்சு எடுப்பதற்கு இடமளிக்கவும்' என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளையும் சுலோக அட்டைகளையும் ஏந்தி இருந்ததோடு எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.
அந்த தொழிற்சாலையில் மீன்களிலிருந்து அகற்றப்படும் உடற்பாகங்கள் பரல்களில் சேமித்து வைக்கப்பட்டு உரத் தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏனைய கழிவுகள் அந்த தொழிற்சாலையிலிருந்து நீர்கொழும்பு களப்புக்கு அகற்றப்படுகிறது. இதன் காரணமாக களப்பு மாசடைந்துள்ளது. சுற்றாடலிலும் துர்நாற்றம் வீசுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.