பிக்குகள் போராட்டத்தில் கத்திகளுடன் பிடிபட்ட நபர் - கஸ்ஸப்ப தேருக்கு எதிராக JVP முறைப்பாடு
பலாங்கொட காசப்ப தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி (JVP) காவல்துறையிடம் முறைப்பாடொன்றை கையளித்துள்ளது
கறுவாத்தோட்டம் காவல் நிலையத்தில் நேற்று (23) குறித்த முறைப்பாடானது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஆரம்பம் முதல் கஸ்ஸப தேரர் மக்கள் விடுதலை முன்னணி தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு எதிராக விசாரணை நடத்துமாறு மக்கள் விடுதலை முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொய்ப் பிரசாரங்கள்
கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்கள் நடத்திய போராட்டத்தின் போது, இரண்டு கத்திகளுடன் பிடிபட்ட நபர் ஒருவர் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி தலைமையகத்துடன் தொடர்புடையவர் என பலங்கொட கஸ்ஸப தேரர் குற்றம் சாட்டியிருந்தார்.

எனினும், இந்தச் சந்தேகநபருக்கும் தமது பெலவத்தை அலுவலகத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என ஜே.வி.பி முற்றாக மறுத்துள்ளது.
தேரரின் இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஜே வி பியின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடிக்கடி கட்சியின் தலைமையகத்திற்கு வந்து செல்வதால், இந்த போலி குற்றச்சாட்டு அலுவலகத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்றும் ஜே.வி.பி கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணை நடத்துமாறும் ,சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளையும் காவல்துறையிடம் பாரப்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |