பிரித்தானியாவிலிருந்து அனுப்பப்பட்ட கழிவு கொள்கலன்கள் தொடர்பில் வெளி வந்துள்ள தகவல்
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கழிவு கொள்கலன்களின் இறுதி தொகுதி இன்று மீள ஏற்றுமதி செய்யப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.விஜித தெரிவித்துள்ளார்.
இதன்படி, 45 கழிவு கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தின் சி.ஐ.சி.டி முனையத்திலிருந்து கப்பலில் ஏற்றப்பட்டுள்ளது.
மருத்துவ இரசாயன கழிவுகள் உள்ளிட்ட 242 கொள்கலன்கள் 2019 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அவை களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த கொள்கலன்கள் பல்வேறு கட்டங்களாக எவர் எவர் ஜீனியஸ் என்ற கப்பலின் மூலம் பிரித்தானியாவிற்கு இவை மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
எம்மால் மீள் ஏற்றுமதி செய்யப்பட்ட அனைத்து கொள்கலன்களும் மீள கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரித்தானியாவின் சுற்றாடல் அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு சட்ட விரோதமாக கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை இறக்குமதி செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என ஜி.விஜித தெரிவித்துள்ளார்.
