ஜி.யு.போப்பின் கல்லறைக்குப் பயணம் செய்த புலம்பெயர் படைப்பாளர்கள்
தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய ஆங்கில / தமிழ் மற்றும் மொழியியல் மேதை அமரர். ஜி.யு.போப் அவர்களின் கல்லறைக்கு புலம்பெயர் படைப்பாளர்கள் பயணம் செய்துள்ளனர்.
கடந்த 28.05.2023 அன்று லண்டனிலிருந்து ஆறு நூல்களைப் படைத்த படைப்பாளி, பொறியியலாளர் எம்.ரி.செல்வராஜா உள்ளிட்ட புலம்பெயர் படைப்பாளர்கள் ஒக்ஸ்போட் நகரில் Walton well Road இல் இருக்கும் ஜி.யு.போப்பின் கல்லறையைக் காணச் சென்றிருந்தார்கள்.
போப்பின் இறுதி ஆசைகள்
போப் தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் இறுதி ஆசைகள் மூன்றினைத் தெரிவித்திருந்தார்.
1. கல்லறையில் ஒரு “தமிழ் மாணவன்” என்று எழுதுங்கள்.
2. மொழி பெயர்த்த திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களைக் கல்லறையில் வையுங்கள்.
3. கல்லறை கட்டுவதற்கு தமிழர்கள் ஒரு சிறு உதவியேனும் செய்யுங்கள். என்பவைதான் அந்தக் கோரிக்கைகள்.
படைப்பாளர்கள் வெளிப்படுத்திய ஆதங்கம்
"ஒக்ஸ்போட் நகரத்தின் பிரதான வீதியில் அந்த மயானம் அமைந்துள்ளது.
மயானத்தின் ஆரம்பத்திலேயே சுமார் எட்டாவது, ஒன்பதாவது கல்லறையாக அமரர் ஜி.யு.போப்பின் கல்லறை காணப்படுகிறது.
தனது வாழ்விலே கல்லறை பற்றிக் கனவு கண்டவரின் கல்லறை பத்தோடு பதினொன்றாக தனித்த அடையாளங்கள் எதுவுமின்றி இருப்பது எமக்கு வேதனையை அளிக்கிறது.
உலகளாவிய ரீதியிலே ஜி.யு.போப்பின் வரலாற்றைக் அறியும் போது, அவர் தம் கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதப்பட்டுள்ளதாகவே கற்பிதமாகிறது, அதனையே பலரும் நம்புகிறார்கள், ஆனால் அதில் உண்மை இல்லை.
அங்கே அப்படி எதுவும் எழுதப்படவில்லை, அவருடைய இறுதி ஆசை இதுவரைக்கும் நிறைவேற்றப்படவேயில்லை.
கல்லறை சாதாரண கல்லறையாகவே காணப்படுகிறது, தமிழ் மக்களாகிய நாங்கள் ஜி.யு.போப்பின் கல்லறையில் அவர்தம் விருப்புகளைப் பதிய வேண்டியது அவசியம் என கருதுகிறோம்." என எம்.ரி.செல்வராஜா உள்ளிட்ட குழுவினர் கவலை வெளியிடுகின்றனர்.




